நான் எருக்கலம்பிட்டி எனது எருக்கலம்பிட்டி கவிதை


புழுதி நிறைந்த சுத்தமான மண்,
பூக்களே இல்லாத சோலைவனம்,
நீரூற்றுக்கள் நிறைந்த பாலைவனம்,
நிழலில்லாத நிஜங்களே எல்லாம்..!!

நாளாபக்கமும் கடல் சூழ்ந்த 
சீலதுவீபம் என் 
சின்ன எருக்கலம்பிட்டி.

ஈச்சங்குலையில் 
உப்புத்தண்ணி தெளிச்சதும்
வேப்பங்கிளையில் 
ஊஞ்சள் கட்டி ஆடியதும்
மனசு மறித்துப்போனாலும்
மங்காத நினைவுகள்..

சங்கத்து ஆளுக சந்திக்குச்சந்தி
நிப்பாக சத்தியமா ஒருநாளும் 
சண்டையிட்டது கிடையாது..

மறைக்காமாரக் கண்டாக்கா மடிச்ச சாரம் கீழே போகும்
ஆசிரியரக் கண்டாக்கா 
அங்கால ஓடிப்போவோம்,

மருமகனக் கண்டமாமி 
மனங்குருகி ஒதுங்குவாக
வேலி ஓர முள்ளுளதான் 
சேலை கிழிச்சு போவாக..!!

பாத்தும்மா நெய்து முடிச்ச 
பலசரக்கு பெட்டி அது
அடுக்குமாடி கட்டிடம்போல்
நேர்த்தியான அழகு தரும்..

சும்மாடு தலையில் வச்சு 
சொவராம்மா மகுடம் சூட்ட
வீடுவரை விழகிடாம கூடவரும்
விறகுக்கட்டு...

பாத்தியில பீளி கண்டா
நெடுநெடுன்னு கிழங்கிருக்கும் 
சுட்டெடுத்து கிழங்குநாளு 
சுட்டுத்திண்ண சுகம் மறக்கல ..

கட்டச்சிமுணார் கடையில
கடல வாங்கி திண்ணதும்
ஆனாமூனா கடையில 
அரிசி பொருக்கி திண்ணதும்
அய்யகோ மறக்க...

குரும்புத் தனத்தில குரும்ப 
திரு(டி)கி குடிச்சதும்
கூட்டாஞ்சோறு ஆக்கி
குதூகளிச்ச கும்மாளமும்
எப்படி மறப்பேன் இனி எங்கனம் கான்பேன்??

நச்சுப்பாம்பு பயமில்ல 
நாவப்பழ காட்டுக்குள்ள
எத்தன முள்ளு குத்தினாலும்
எழந்தப் பழத்த விட்டதும் இல்லை.

சக்கரவள்ளிக்குளம் 
சளிக்காம இனிச்சதென்ன
முக்காடி மூனுகுளம்
முத்துமுத்தாய் அமைந்ததென்ன
தாண்டாணி தாழ்ந்த குளம்
தங்கமாய் ஜொளித்ததென்ன..

ஊரைச்சுற்றி கடல் என்றாலும்
உப்புக்கரிக்காத காற்று வரும்
உப்புத்தண்ணி புளியங்காய்
ஊறுகாய்க்கு நிகராகும்..

வீர விளையாட்ட 
விபரிக்க வார்த்தையில்லை 
கிளித்தட்டு போல ஒன்றை
ஒலிம்பிக்கிலும் கண்டதில்லை..

நாளாபக்கமும் பெருங்கடல்
நடுவுல அதன் குட்டிக் கடல் 
கம்பீரமாய் பள்ளி ரெண்டு
ஊர்தாங்கிய நீர்த்தாங்கி ஒன்று
வாராந்தச் சந்தை உண்டு
மாதாந்தச் சந்தா உண்டு
இன்னும் எத்தனையோ
எண்ணில் அடங்காதது
மன்னாருக்கு மகத்தானது
எருக்கலம்பிட்டி என்றானது..!!!!

என் வயதுக்குறிய வாழ்க்கை
கிடைத்ததும் அங்கேதான்
என் வாழ்வு முடிய 
ஆசைப்படுவதும் அங்கேதான்!!!!!

ஆக்கமும்
ஏக்கமும்
நாட்டான் றிஸ்வான் 
நன்றியுடன் வஸ்ஸலாம்

Ads go here

Comments