இரவில் நறநறவென பல்லை கடிக்கிறீர்களா... Mouth Card டை பயன்படுத்துங்கள்
இரவில் தூங்கும்போது , நற நறவென்று பற்களை கடிப்பது சிலருக்கு பழக்கமாக இருக்கும். இரவில் தூங்கும்போது கடிப்பதால், அவர்களுக்கு அதை பற்றித் தெரியாது. பக்கத்தில் படுத்திருப்போர் கூறினால் மட்டுமே இந்தப் பழக்கம் தெரிய வரும். இரவில் பல் கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, தொடர்ந்து லேசான தலைவலி இருக்கும். தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு கடிப்பதால், பற்களும் தாடை மூட்டுக்களும் பாதிப்படைவதற்கான சாத்தியம் மிக அதிகமாகும்.
இந்த பழக்கத்திற்கு முக்கிய காரணம், மன அழுத்தம் மற்றும் கவலை. இதை தவிர அழுத்தமாக கடிப்பது, பல் ஓரிடத்தில் இல்லாமல் இருப்பது அல்லது கோணலான பற்களாலும், இரவில் பற்கள் கடிக்கும் பழக்கம் ஏற்படலாம்.இது குறித்து பல் டாக்டர் ராமதாஸ் கூறுகையில், நரம்பு சம்பந்தமான பாதிப்பு இருந்தாலும், குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி இருந்தாலும் பல் கடிக்கும் பழக்கம் ஏற்படும். பற்களை அழுத்தமாக தொடர்ந்து கடிப்பதினால், தாடை எலும்பு முறிவதோ, பற்கள் வலுவிழந்து ஆடுவதோ அல்லது பற்கள் விழுந்துவிடுவதோ கூட ஏற்படலாம்.
பற்கள் பாதியாக உடைந்து விடுதல், காது கேளாமை, மற்றும் முகத்தின் வடிவம் மாறிவிடுவதும்கூட இதனால் ஏற்படலாம். இரவில் பற்கள் கடிக்கும் பழக்கம் உள்ளோர், உடனடியாக பல் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். மவுத் கார்ட் என்றழைக்கப்படும் பிளாஸ்டிக்கினால் ஆன அச்சு ஒன்றை இரவு படுக்கும்போது வாயில் மாட்டிக்கொள்வது, பற்களை கடிப்பதை சுலபமாக தடுத்துவிடும். இந்த மவுத் கார்டை, பல் மருத்துவர் அவரவர் பற்களின் அமைப்பிற்கேற்ப வடிவமைத்துப் போட்டுக்கொள்ளவேண்டும்.
மன அழுத்தத்தினால், பற்களை கடிப்பது தெரிய வந்தால், முறையான ஆலோசனை பெறுவது, பிசியோதெரபிஸ்டை பார்த்து சில பயிற்சிகளை எடுத்துக்கொள்வது மனதை அமைதிப்படுத்தும் முறைகளை கற்றுக்கொள்வது மற்றும் தேவைப்பட்டால், தசைகளையும் மனதை தளர்வாக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வதும் நன்மை பயக்கும். ஆனால் பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விழிப்புணர்வு இல்லை என்றார்.
இரவில் பல்லை கடிப்பது தவிர்க்கப்படக்கூடிய நோய். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆலோசனைகளை பெற வேண்டும். இரவில் பல் கடிக்கும் பழக்கம் உள்ளோர், நொறுக்குத் தீனிகள், அதிக காபி, அதிக சாக்லெட், கோலா போன்றவைகளை தவிர்க்கவேண்டும். மது அருந்துதல்கூட இப் பழக்கத்தை அதிகப்படுத்தும். பகல் நேரத்தில்கூட பற்களை கடிப்பதா தோன்றினால், நாக்கின் நுனியை பற்களிடையே வைத்திருக்க பழக்கிகொள்ளலாம். இது தாடை தசைகள் தளர்வாக இருக்க உதவும். இதேபோல், சுடுநீரில் நனைத்த துணியை கொண்டு இரண்டு காதுகளுக்கு முன் கன்னங்களிடையே வைத்திருக்கவேண்டும். இதனால், தாடை தசைகள் தளர்வடையும் என்கின்றனர் டாக்டர்கள்.
குட்டீசுக்கு குடிநீர் அதிகம் கொடுங்கள்
குழந்தைகளில் பற்கள் கடிக்கும் பழக்கம் சில நேரங்களில் ஏற்படும். இது முதலில் பற்கள் வரும்போதும், பால் பல் விழுந்து, புது பல் முளைக்கும்போதும், பற்களை இரவில் குழந்தைகள் கடிப்பர். இதை தவிர, வயிற்றில் பூச்சி இருந்தாலும், சத்துக்குறைபாடு இருந்தாலும், ஹார்மோன் கோளாறு, ஒவ்வாமை இருந்தாலும் பற்களை கடிப்பர். குழந்தைகளின் மன ரீதியான பிரச்சினையை சரி செய்வது, சத்துள்ள உணவுகளை சாப்பிட வைப்பது, நிறைய தண்ணீர் குடிக்க செய்வது போன்றவைகளும் குழந்தைகளின் இந்த பிரச்னைக்கு உதவும்.
Ads go here

Comments